பா.ஜ.க.வில் இணைந்தார் வி.பி.துரைசாமி..!

திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி.துரைசாமி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

சென்னை, மே-22

திமுக தலைமை மீது கடந்த சில ஆண்டுகளாகவே வி.பி.துரைசாமி அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று பாஜக தலைவர் முருகனை சந்தித்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரசியல் ரீதியாக விவாதித்தனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார். துரைசாமிக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி, விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாக வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் அவருக்கு தேசிய தாழ்ப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என தமிழக பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *