தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி, மே-22

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு ஆண்டு குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை துவக்கினர். இந்த போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் அருகில் உள்ள பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது. 99 நாட்களை கடந்த நிலையில் 100வது நாளில் போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர். அவர்கள் தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர்.

நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

இதையொட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு இடங்களில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது.எனவே, அஞ்சலி நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே மூடப்பட்டிருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *