தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-22

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறையால் கடந்த 2016ம் ஆண்டு மறைந்தார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா’ நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் ஜெயலலிதாவின் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை கலெக்டர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற ஆளுநரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தின்மூலம், புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்து பணிகளை துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகின்றன.

மேலும், இந்த வேதா இல்ல அறக்கட்டளைக்கு முதல்வர் தலைவராக இருப்பார் என்றும் , துணை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் மக்கள் தொடர்பு தகவல் இயக்குநர் செயலாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை வேதா இல்லத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அங்குள்ள பொருட்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *