கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது குண்டர் தடுப்புச்சட்டம்..!

போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மே-21

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம், கொரோனா நோய்த் தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வர் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறியிருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் கொரோனா சீனாவை தாக்கியவுடன் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டதாக கூறியிருந்தார். அத்துடன் சீனர்களுக்கு மருந்து கொடுத்து உதவி செய்ததாகவும் கூறினார். தான் கொடுத்த மருந்தால்தான் சீனா கொரோனாவை விரட்டியது என்றும் கூறி அதிர வைத்தார். அத்துடன் தணிகாச்சலம் “என்கிட்ட மருந்து இருக்கு. அப்படியிருந்தும் ஏன் இந்த அரசு என்ன கண்டுக்காம இருக்கு” என்று கோபமாக வீடியோவில் பேசினார்.

சமூக வலைதளங்களில் தணிகாச்சலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் பரவ ஆரம்பித்தன. இதையடுத்து விசாரணையில் இறங்கிய தமிழக சுகாதாரத்துறை அவரை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தது. இதையடுத்து சித்த வைத்தியர் தணிகாச்சலம் பொருளதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மேலும் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *