வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு..! மு.க.ஸ்டாலின் அதிரடி..!

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வி.பி. துரைசாமிக்குப் பதில் ராஜ்யசபா எம்.பி.யான அந்தியூர் செல்வராஜ், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, மே-21

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி. திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்ததால் அவர் பாஜகவில் இணைய உள்ளார் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து அவர் ’’தமிழக பாஜக தலைவர் முருகனும், நானும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் அவருக்கு வாழ்த்து சொல்லத்தான் சந்தித்தேன். இது அரசியல் ரீதியிலான சந்திப்பே இல்லை. முருகன் என்னுடைய சொந்தக்காரர். பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வாழ்த்தப்போனால் என்ன தவறு? என கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில், ‘’ எனது பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான். இதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. 3 நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூறுவேன். திமுகவில் தொடர்ந்து இருப்பேன்’’ எனத் தெரிவித்துள்ளார். திமுகவில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் எனவும் அருகில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு ஸ்டாலின் நடப்பதாகவும் வி.பி. துரைசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *