ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் பலி.. மம்தா பானர்ஜி அறிவிப்பு

ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் பலியாகியிருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா, மே-21

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது நேற்று முழு அளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

கொல்கத்தா நகரத்தில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.

நேற்றைய நிலவரப்பு 5500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் ஆம்பன் புயலுக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இதுபோன்றதொரு பேரிடரை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து, தற்போதிருக்கும் நிலைமையை, சேதங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் மம்தா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *