திருப்பதி லட்டு இனி ரூ.25க்கு விற்பனை.. தேவஸ்தானம் முடிவு

ஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி, மே-21

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:-

ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் கடந்த 2 மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தரிசனம் கிடைக்காத நிலையில் ஏழுமலையானின் பிரசாதத்தையாவது அளிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதனால் ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25-க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு முடியும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும். ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேவஸ்தான மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், வேலூர், கன்னியாகுமரியில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கி சென்று பக்தர்களுக்கு அளிக்கலாம். இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *