இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு.. ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்..

ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மே-21

ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதன்படி, சிறப்பு ரயிலுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கு இன்று காலை 10 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாவது ;-

ஜூன் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள ரயில் சேவையில் முதல் 73 ரயில்களுக்கு மட்டும் சுமார் 1.49 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இவற்றில் பயணம் செய்ய 2,90,510 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இன்று காலை முன்பதிவு தொடங்கி இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த மாநிலம் செல்ல காத்திருக்கிறார்கள். ஏராளமானோர் சொந்த ஊரில் இருந்து பணிக்குத் திரும்ப தயாராக உள்ளனர். மே 22 முதல் நாடு முழுவதும் சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு மீண்டும் தொடங்கும்.

விரைவில் நிலைமை மாறுவதற்கு ஏற்ப மேலும் அதிக ரயில்கள் அறிவிக்கப்படும். ரயில் நிலையங்களில் கடைகளைத் திறக்கவும், அதில் பார்சல்கள் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *