10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்…தேர்வுகள் ஜூன் 15 முதல் 25 வரை நடைபெறும்…அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!

சென்னை, மே-19

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி  வரை நடக்கும் எனவும் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த தேர்வு  ஜூன் 2ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும், கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் , அச்சப்படுவார்கள் என பல்வேறு தரப்பினர் தேர்வை ஒத்திவைக்க   கோரிக்கை விடுத்தனர். 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொடர்ந்து, தேர்வை தள்ளி வைக்க  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் இன்று தாக்கல்  செய்துள்ளார்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஜூன் 15-ம் தேதி மொழிப்பாடம்
ஜூன் 17-ம் தேதி ஆங்கிலப்பாடம்
ஜூன் 19-ம் தேதி கணிதம்
ஜூன் 20-ம் தேதி மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு) 
ஜூன் 22-ம் தேதி அறிவியல் 
ஜூன் 24-ம் தேதி சமூக அறிவியல்
ஜூன் 25-ம் தேதி தொழில்கல்வி தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *