இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.. 3163 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 3163 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, மே-19

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 1,01,139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3163 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39174 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 2350 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1249 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8437 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 11,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4406 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 11,745 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 694 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4804 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *