1,100 பணியாளர்களை பணி நீக்கம்செய்யும் ஸ்விகி நிறுவனம்..!

உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம் 1,100 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னை, மே-18

கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 50 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியிடப்பட்ட தளர்வுகளை தாண்டியும் தொழிற்துறை இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. அதனால் பல தொழிற்நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. அதனால், பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

இந்தநிலையில், இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஸ்விகி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஸ்விகி நிறுவனத்துக்கு இது மிகவும் சோகமான தினங்களில் ஒன்று எனவும், எதிர்பாரதவிதமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும். ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றிய வருடங்களின் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீடு இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சொமேட்டோ நிறுவனம் 13 % பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *