தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மே-18

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தடுப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வருகிறது. நோய்த் தொற்று குறைய, குறைய தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முகக்கவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *