சத்தீஸ்கரில் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடையை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராய்ப்பூர், மே-18

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மாநில அரசுகள் சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு சூழ்நிலைக்கு ஏற்ப நீட்டிக்கப்படுகிறது.

அவ்வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில உள்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதிலும், பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வரை ரெஸ்டாரன்டுகள், ஓட்டல் பார்கள், கிளப்புகள் மூடப்படும். விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை 86 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 59 பேர் குணமடைந்த நிலையில், யாரும் உயிரிழக்கவில்லை. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியில் 23-வது இடத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *