மறக்கமுடியுமா..! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..

மறக்கமுடியுமா..!

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள், சொந்த நாட்டிலேயே இனப்படுகொலை செய்யப்பட்டு, அகதிகளாக பரிதவிக்க விடப்பட்டுள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றிய நினைவலைகளை இப்போது பார்ப்போம்.

மே-17

தமிழினத்தை வேரறுக்க வேண்டும் என்று தீர்மானித்த இலங்கை அரசு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அதிநவீனஆயுத உதவியுடன், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தியது. நள்ளிரவில் சிங்கள ராணுவம் தனது கொலைவெறித் தாக்குதலை எப்போதும் இல்லாத வேகத்துடன் தொடங்கியது. மே 17,​ 18,​ 19 ஆகிய மூன்று நாள்களில் வான் வழித் தாக்குதல்,​​ கனரக ஆயுதங்களிலிருந்து பொழியும் குண்டுமழை,​​ கடலில் உள்ள போர்க் கப்பல்களிலிருந்து எறிகணை வீச்சு என மக்கள் தப்பிக்க இயலாத வகையில் தாக்குதல் தொடர்ந்தது.​ தடைசெய்யப்ட்ட அனைத்து வெடிமருந்துகளையும், ஆயதங்களையும் சிங்களக்கும்பல் பயன்படுத்தியது. பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதால் பச்சை மரங்கள் கூட தீப்பற்றி எரிந்தது.அங்குமிங்கும் ஓடி பதறித் துடித்தபடி பெற்ற குழந்தைகளை அணைத்தவண்ணம் தாய்மார்கள் மரித்தனர். அந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.​படுகாயத்துடன் எழுந்து ஓடமுடியாத நிலையில் கீழே கிடந்தவர்கள் சிங்கள ராணுவத்தினரால் உயிரோடு புதைக்கப்பட்டனர். குறிப்பாக இறுதிக்கட்ட போரின் இறுதி ஐந்து மாதங்களான ஜனவரி முதல் மே 2009 வரை ஆன காலக்கட்டத்தில் மிகக் கொடூரமான போர்க் குற்றங்களையும்,​​ மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் சிங்கள அரசு செய்துள்ளது. அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்கள்,​​ ராணுவம் அறிவித்த தாக்குதல் அற்ற வளையங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும்,​​ ராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களும்,​​ அதன் விளைவாக மக்கள் மட்டுமல்ல,​​ மக்களுக்குத் தொண்டு செய்ய வந்த மருத்துவர்களும்,​​ தொண்டர்களும் கொல்லப்பட்டார்கள். ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள்.​ வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள்,​​ நாபாம் குண்டுகள் ஆகியவற்றை சிங்கள ராணுவம் பயன்படுத்தியது. தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டும் ராணுவத்தினரின் வெறி அடங்கவில்லை.​ தமிழர் பகுதிகளிலிருந்த குடியிருப்புகள்,​​ மருத்துவமனைகள்,​​ பள்ளிகள் மற்றும் கோயில்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன.​ தமிழர்களின் பொதுக் கட்டமைப்புகளை அழித்ததன் மூலம் மீண்டும் அங்கு தமிழர்கள் தலையெடுக்கவிடக்கூடாது என்பதே அவர்களின் எண்ணமாகும்.போர் முடிந்த பிறகு ஐந்து மாத காலத்துக்கு மேலாக வன்னிப் பகுதியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் சிறிது சிறிதாக சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர்.​ முகாம்களில் அதிகமான எண்ணிக்கையில் அடைக்கப்பட்டு பாதுகாப்பான உணவு,​​ நீர்,​​ சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகினர். முகாம்களிலும்​​ அழிக்கப்பட்ட கிராமங்களிலும் அரசால் நடத்தப்பட்ட நலன்புரி கிராமங்களிலும் ராணுவத்தினர் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகள் வர்ணிக்க முடியாதவை.​ மனித குலத்துக்கு எதிரான குற்றமாக ரோம் சட்டத்தில் குறிப்பிடப்படும் இது.​ ​ கருக்கலைப்பு,​​ குடும்பப் பெருமைக்கு இழுக்கு,​​ அவமானம்,​​ மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தீவிரமாக நடைபெறுகிறது.​ 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களும்,​​ 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் உயிரிழந்துள்ளனர்.​ 10 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மொத்தத்தில் இலங்கையில் தமிழினத்தை மீண்டும் தலையெடுக்க விடாதபடி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டுள்ளது.​

அங்குள்ள தமிழர்கள் ஐ.நா.வையோ,​​ உலக வல்லரசுகளையோ நம்பியிருக்கவில்லை.​ உலகம் முழுவதிலுமிருக்கிற தமிழர்களையே நம்பியிருக்கிறார்கள்.​ தங்களின் சகோதரத் தமிழர்கள் ஒருபோதும் தங்களைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். தங்களது தலைமுறையிலேயே தங்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் அந்தக் கொடூரமான கொலை நிகழ்ச்சிகளை ஒருபோதும் நாம் மறக்கக்கூடாது.​ ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் அது சினத்தீயாக பற்றி எரியவேண்டும்.​ அதை ஒருபோதும் அணைய விடக்கூடாது.​ இந்த சினத்தீ எதிரிகளையும்,​​ துரோகிகளையும் சுட்டெரிக்கும். அந்த விடியலைத்தான் தமிழினம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *