தலைமைச் செயலாளரின் சாதியை பகிரங்கப்படுத்திய கி.வீரமணி – பொன்னுசாமி கண்டனம்

தமிழக தலைமைச் செயலாளரின் சாதியை பகிரங்கப்படுத்திய கி.வீரமணிக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-17

இது தொடர்பாக தி.க. தலைவர் கி.வீரமணிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் கூறியிருப்பதாவது,

திராவிடர் கழக தலைவர் திரு. கி.வீரமணி அவர்களுக்கு வணக்கம்.

திமுகவின் “ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவை உறுப்பினர்கள் திரு. டி.ஆர்.பாலு, திரு. தயாநிதி மாறன் உள்ளிட்ட குழுவினர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து வழங்கிய போது தலைமைச் செயலாளர் அவர்களை அவமதித்து விட்டதாக கூறி அவரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். ஆனால் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டிக்க விட்டது வியப்பளிக்கிறது. ஒருவேளை திமுகவுடனான கூட்டணி உங்களது கைகளையும், வாயையும், எழுதுகோலையும் கட்டிப்போட்டு விட்டதோ…? அதுமட்டுமின்றி ஏற்கனவே “உயர்நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர்களுக்கு உயர் பதவிகள் திமுக போட்ட பிச்சை” என ஆர்.எஸ்.பாரதி பேசிய போது கூட அவரையும் கண்டிக்க மறந்து போனீர்கள். இது அரசியல் கூட்டணி தர்மம் என்பதோ…?

மேலும் அதை விட கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்வதாக கூறி, உயர்ஜாதியினரை தொடர்ந்து வசைபாடி வரும் நீங்கள் தலைமைச் செயலாளரை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “அவர் ஒரு ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தவர். உயர் பதவியில் உள்ளார் என்பதை நினைக்கும்போது இன உணர்வும், மனிதநேயமுள்ள நமக்கு நமது எழுதுகோல் கடுமையாக எழுத மறுக்கிறது”. என கூறியுள்ளீர்கள். அப்படியானால் பட்டியலின மக்கள் அரசின் உயர் பொறுப்புகளில் இருப்பதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லையா..? இல்லை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உயரதிகாரியான தலைமைச் செயலாளர் திமுக மக்களவை உறுப்பினர்களை எதுவும் பேசக் கூடாது என சொல்ல வருகிறீர்கள் அப்படித் தானே…?

சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் நீங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைச் செயலாளராக இருப்பதைக் கூட ஜீரணிக்க முடியாமல் உங்களது கூட்டணி கட்சியான திமுகவையும், திமுக தலைமையையும் திருப்தி படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் வெளியிடப்பட்ட உங்கள் அறிக்கையை படித்த போது போது “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கையிலே..” என்கிற பாரதியின் வைர வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

இது வரை தாழ்த்தப்பட்ட மக்களை காத்திட வந்த கடவுள் போல் சித்தரிக்கப்பட்ட உங்களது கபட வேடம் தற்போது உங்களாலேயே களையப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியாரின் வாரிசுகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள் என்கிற திராவிடக் கட்சிகளின் நாடகத்தை இனியும் காட்சிப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. இனியும் பட்டியலின மக்களை ஏமாற்றி தமிழகத்தில் அரசியல் செய்யும் உங்களது எண்ணம் சிறிதும் ஈடேறப் போவதில்லை.

எனவே தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி, வேதனையடைய செய்யும் வகையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் பேசியதை விட ஒருபடி மேலே சென்று அம்மக்களின் நெஞ்சில் ரணமாகிப் போன வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை செய்திருக்கும் உங்களுக்கு எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு தங்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உடனடியாக திரும்ப பெற வேண்டும், அப்படியொரு அறிக்கை வெளியிட்டமைக்காக நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *