தமிழகத்தில் ஒரே நாளில் 163 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை..! அள்ளிக்கொடுத்த குடிமகன்கள்..!

தமிழகத்தில் நேற்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு, 163 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

சென்னை, மே-17

தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது. கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என டாஸ்மாக்கை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்தது.

இதனால் தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. டாஸ்மாக் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு வருகிறவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக விலகலை கடைபிடிக்கவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக டோக்கன் வழங்கும் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனிடையே நேற்று மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 163 கோடி ரூபாய் அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44.7 கோடி ரூபாய் அளவில் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ. 40.5 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.33.01 கோடியும் வசூலாகி இருக்கிறது. இதன்மூலம் டாஸ்மாக் வருவாய் மொத்தமாக 163 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *