ராணுவம், விண்வெளி ஆய்வு, அணு சக்தி, மின்சாரம் உட்பட பல துறைகளில் தனியாருக்கு அனுமதி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

ராணுவம், விண்வெளி ஆய்வு, அணு சக்தி, மின்சாரம் உட்பட பல்வேறு துறைகளில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

டெல்லி, மே-16

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நான்காம் கட்டமான இன்றைய அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதன் முக்கிய அம்சங்கள் :-

நிலக்கரி, கனிம தாதுக்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமான துறை, விண்வெளி, அணு ஆயுத துறை உள்ளிட்ட 8 துறைகள் சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்படும்.

நிலக்கரித் துறை என்பது இதுவரை மத்திய அரசின் முற்றுரிமை பெற்ற தொழிலாக இருந்தது. இனிமேல் நிலக்கரி துறையில் தனியார் அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கரியை எடுக்கக்கூடிய பகுதிகளில் மீத்தேன் வாயு பிரித்தெடுக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் அரசு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்.

50 நிலக்கரி தொகுதிகள் உடனடியாக வழங்கப்படும். உச்சவரம்புடன் முன்பண கட்டணம் பெறப்படும். நிலையான நிதி பெறும் நடைமுறைக்கு பதிலாக வருவாய் பகிர்வு அடிப்படையில் இது செய்யப்படும். எந்தவொரு தரப்பினரும் நிலக்கரித் பிளாக்குகளை ஏலம் எடுத்து ஓபன் சந்தையில் விற்கலாம். நிலக்கரி கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

கனிம துறையிலுள்ள கெடுபிடிகளும் குறைக்கப்படுகிறது. பாக்சைட், நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். பிற நிறுவனங்களுக்கு குத்தகையை மாற்றவும் அனுமதி தரப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும். ராணுவ தளவாட உற்பத்தியில், தன்னிறைவை எட்டும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் பயன்படுத்தப்படும். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில், 74 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும். முன்பு இது 49 சதவீதமாக இருந்தது.

இந்திய விமான வான் பரப்பை தாராளமாக பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டு கட்டுப்பாடு நீக்கப்படும். இதனால் விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதி செலவு கணிசமாக குறையும். விமான நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி மிச்சமாகும். மேலும், கூடுதலாக 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்படும். தனியார் பங்களிப்புடன் இவை செயல்படும். ஆக மொத்தம் 12 விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும். 2300 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

யூனியன் பிரதேசங்களில் மின் பகிர்மான நிறுவனங்கள் இனி தனியார் வசம் ஒப்படைக்கப்படும். சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புகள் ஊக்குவிக்கப்படும். இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பை தனியார் பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவமனைகள் அமைக்க வழங்கப்படும் மானியம் 30 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது.

அணுசக்தி துறையிலும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் துறையில், பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளை உருவாக்க, தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். மருத்துவ ஐசோடோப்புகளின் உற்பத்திக்காக தனியார்-அரசு பங்களிப்பு முறையில் புற்றுநோய் சிகிச்சை ஐசோடோப் ஆய்வுக்கு பிரத்யேக அணுக்கூடம் அமைக்கப்படும். புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை அளிக்க இது உதவும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *