10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, மே-16

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதேபோல் ஒத்திவைக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என்றும், தேர்வு எழுத முடியாமல் போன 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத இ-பாஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். வெளி மாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், மேலும் அவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெற கடிதம் அனுப்பப்படும். ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சில மாணவர்கள் வெளி மாவட்டத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதற்காக https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதள லிங்கில் சென்று இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியூரில் உள்ள தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வந்த மாணவர்களை 3 நாள்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *