ஏழைகள் பணத்தை கேட்கிறார்கள்.. கடனை அல்ல.. ராகுல் காந்தி

ஏழை மக்களின் இன்றைய தேவை பணம்தான், கடன் அல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.ஏழை மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவுமாறு மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி, மே-16

கொரோனா தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 13ம் தேதி முதல் சலுகைகளைஅறிவித்து வருகிறார். கடந்த 13ம் தேதி, 5.94 லட்சம் கோடி, நேற்று முன்தினம், 3.16 லட்சம் கோடியில் சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நேற்று, 3வது கட்டமாக 1,63,343 கோடியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் டெல்லியில் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ராகுல்காந்தி கூறியதாவது;-

ஏழை மக்கள் தற்போதிருக்கும் சூழ்நிலையில் நிதியுதவியைத் தான் எதிர்பார்க்கிறார்கள். கடனை அல்ல. இன்று ஏழை மக்களுக்குத் தேவையானது பணம்தான். எனவே, பிரதமர் நரேந்திர மோடியை நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு கூர்ந்து சிறப்பு திட்டத்தை மாற்றியமையுங்கள்.

ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் செய்வதைப் போலவே, அரசாங்கமும் மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட வேண்டும். நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இது ஒரு பேரழிவு பிரச்சினையாக மாறும்.

ஊரடங்கால் தொழிலாளர்கள் நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டி உள்ளது. நெருக்கடியான இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பணம் தேவை. எனவே, பிரதமர் மோடி அறிவித்துள்ள நிவாரணத் தொகுப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நேரடி வங்கி பரிமாற்றம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு நீட்டிப்பது மற்றும் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவதை பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் இந்த மக்கள் தான் நமது எதிர்காலம்.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *