விவசாய கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு..நிர்மலா சீதாராமன்

விவசாய உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ரூ..1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மே-15

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முதல்கட்ட அறிவிப்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி மற்றும் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். நேற்று இரண்டாம் கட்ட அறிவிப்பில், சிறு விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகளின் நலனுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுவருகிறார். இன்று விவசாயம், பால்வளம், மீன்வளம் சார்ந்த துறைகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

விவசாய உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்த ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறு உணவு உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் குறு உணவு உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *