அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் வாரத்தின் 6 நாட்களும் இயங்கும்.. தமிழக அரசு

மே 18-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50% அரசு ஊழியர்களுடன் வாரத்தின் 6 நாள்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மே-15

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 33% ஊழியர்களுடன் இயங்கி வந்தன.

இந்த நிலையில், மே மாதம் 18ம் தேதி முதல் அரசு அலுவலகப் பணிகளை நெறிமுறைப் படுத்தும் வகையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 50% அரசு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் பணியாற்றும் வகையில் ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதே சமயம், சனிக்கிழமையையும் உள்ளடக்கி, இனி வாரத்தில் ஆறு நாள்களும் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும். ஆறு நாள்கள் பணி நாள்கள் மற்றும் தற்போதிருக்கும் பணி நேரம் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த நடைமுறை மே 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஒரு அரசு அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்கள் 2 குழுக்களாகப் பிரித்து முதல் குழு வாரத்தில் 2 நாட்கள் (திங்கள் மற்றும் செவ்வாய்) அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். பிறகு இரண்டாவது குழு புதன் மற்றும் வியாழக்கிழமை அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும். மீண்டும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை முதல் குழு அலுவலகத்துக்கு வர வேண்டும். இதுபோலவே அடுத்த வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் இரண்டாவது குழுவும், அடுத்த இரண்டு நாட்கள் முதல் குழுவும், மூன்றாவது இரண்டு நாட்கள் இரண்டாவது குழுவும் பணியாற்றும்படி அமைத்துக் கொள்ள வேண்டும்.

குரூப் ஏ பணியாளர்கள் மற்றும் அலுவலக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையில் பணியாற்றும் போது, வீட்டில் இருக்கும் ஊழியர்கள், அலுவலக நிமித்தமாக தேவைப்படும் போது அழைக்க வசதியாக ஏதேனும் ஒரு தொலைத்தொடர்பு சாதனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

இந்த சுழற்சி முறையில் பணியாற்றும் போது, அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்று தேவைப்படும் ஊழியர்கள், அவர்களது பணி நாள் இல்லாத போதும், அலுவலகம் வந்து பணியாற்ற அழைக்கப்படுவார்கள்.

இந்த நடைமுறையானது அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அதாவது தலைமைச் செயலகம், மாவட்ட / மண்டல நிலை அதிகாரிகள், ஆணையர் அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள், பல்கலைக்கழகங்கள், தொழிலகங்கள், நிறுவனங்கள் என அனைத்துக்கும் பொருந்தும்.

அதே சமயம், காவல்துறை, சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் மார்ச் மாதம் பிறப்பித்த அரசாணையின் படியே தொடர்ந்துசெயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தேவைக்கு ஏற்ப போக்குவரத்து வசதி செய்து தரப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *