முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 502 ரன்னில் டிக்ளேர், இரட்டை சதம் அடித்தார் மயங்க்…

விசாகபட்டினம், அக்டோபர்-03

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை கொடுத்து, 39 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 154 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். மறுமுனையில் மயங்க் அகர்வால் 114 பந்தில் அரைசதம் அடித்தார்.

இந்திய அணி 59.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  இதனையடுத்து, மீண்டும் இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித்சர்மாவும், அகர்வாலும் தொடர்ந்து ஆடினார்கள். 23 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 176 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 6 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 20 ரன்னிலும் வெளியேறினார்.

இதனிடையே சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடி வந்த இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரகானே 15 ரன்னில் வெளியேற, சிறப்பாக ஆடி வந்த மயங்க் அகர்வால் 215 ரன் அவுட் ஆனார்.

இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் விராட் கோலி டிக்ளேர் அறிவித்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எல்கர், மார்க் கிராம் களமிறங்கினர். மார்க்கிராம் 5 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த டி ப்ரூயின் 4 ரன்னிலும், டேனி 0 ரன்னிலும் வெளியேறினர்.

நிதானமாக விளையாடி எல்கர் 27 ரன்னிலும் பவுமா 2 ரன்னிலும் களத்தில் இருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்கா அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *