வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு..
தமிழகத்தில் தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மே-14

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை (மே 14), தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 96 டிகிரி, குறைந்தபட்சமாக 82 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15-ஆம் தேதியில் மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும். அதைத் தொடா்ந்து 16-ஆம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் 45 முதல் 85 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவா்கள் குறிப்பிட்ட நாள்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.