200 கோடி ரூபாய்க்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது…நிர்மலா சீதாராமன்

ரூ.200 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அரசுத்துறையில் இனி உலக அளவில் டெண்டர் கோர தடை விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் புதிய முடிவால் இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர தொழில்கள் பயன்பெறும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்லி, மே-13

ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விவரித்து வருகிறார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 6 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

“ஒப்பந்தப்புள்ளியைப் பெறுவதில் இந்தியாவின் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடுவது நியாயமற்ற போட்டியாக உள்ளது. எனவே, அரசு கொள்முதல் தொடர்பான ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. இதற்கான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த டெண்டர்கள் அனைத்தும் இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கே வழங்கப்படும்.அதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். 

இது ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கையாகும். அதேசமயம், உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கும் இது உதவும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *