சிறு,குறு தொழில்களுக்கு பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..

சிறு மற்றும் குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மே-13

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து வரி செலுத்துவோருக்கும், ரூ.18,000 கோடி திருப்பிச் செலுத்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்தோம், பணப்புழக்கம் மக்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இதன் மூலம் 14 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைந்துள்ளனர். சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ .3 லட்சம் கோடி மதிப்புள்ள பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படும். 2020ம் ஆண்டு அக்டோபர் 31 வரை இந்த கடன் கிடைக்கும். இது 4 வருடங்களுக்கான கடன். ஓராண்டுக்கு, கடன் தவணை கிடையாது. அதாவது அந்த ஓராண்டுக்கு அசல் வசூலிக்கப்படாது. அதிகபட்சம் ரூ.25 கோடி கடனுள்ள நிறுவனங்கள் இந்த கடனை பெற முடியும். அதேபோல அதிகபட்சமாக ரூ.100 கோடி வரை வர்த்தகம் செய்வோர் வரை, இந்த சலுகையை பெற முடியும். இதனால், நாட்டில் உள்ள 45 லட்சம், சிறு குறு தொழில் நிறுவனங்கள், பணிகளை துவங்க முடியும். வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். இதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இன்று 15 வகை அறிவிப்புகள் வெளியிட உள்ளேன். அதில் 6 அறிவிப்புகள் சிறு, குறு தொழில்கள் தொடர்பானது. 2 விஷயங்கள், தொழிலாளர் நிதி சார்ந்தது, 2 சிறு தொழில்களுக்கு மற்றும் 3 விஷயங்கள் வரி சார்ந்தவையாக இருக்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *