ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கு தெலுங்கானாவுக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஆகஸ்ட் 28
பெண் எஸ்.பி ஒருவர் ஐ.ஜி. முருகன் மீது தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கை தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண் எஸ்.பி. ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்தின் இணை இயக்குனர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். ஐபிஎஸ் அதிகாரியான முருகன் மீது பாலியல் புகார் பெறப்பட்டதை அடுத்து, மாநில காவல்துறை, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013ன் படி விசாரணைக் குழுவை அமைத்தது. அப்போது இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் எஸ்.பி. மாநில காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சட்டப்படி, தனது புகார் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவர் அதில், முருகனுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முருகனை லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் பதவியில் இருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரினார். இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் முருகன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341, 354, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம், ஐ.பி.எஸ் அதிகாரி முருகன் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை அளிக்க தெலுங்கானா டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.