ரூ. 20 லட்சம் கோடியில் பொருளாதார வளர்ச்சி சிறப்புத்திட்டங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, மே-12

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றினார். சுமார் 36 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு, அவர் நாட்டு மக்களிடம் ஆற்றிய ஐந்தாவது உரை இதுவாகும்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்திற்கு பெரும் நாசம் விளைவித்துள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் உயிரிழப்பதாக வந்திருக்கக்கூடிய தகவல் வேதனை அளிக்கிறது. நமது நாடும் பல இன்னுயிர்களை இழந்துள்ளது.ஆனால், இந்த வைரசிடம் மனிதகுலம் தோல்வி அடையாது. ஒரு பக்கம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதோடு, மற்றொரு பக்கம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நினைப்பது இந்தியாவின் குணம். எனவே இந்தியாவின் முன்னேற்றம் என்பது உலகத்திற்கும் பலனளிக்கும்.

21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றப்பட வேண்டும். இந்த வேதனையான காலகட்டத்தை நாம் சாதனைகளை உருவாக்க பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பல உயிர்களை காப்பாற்றி வருகிறது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நமது நாட்டின் ஐந்து தூண்கள் முக்கியமானவை. அதில் ஒன்று பொருளாதாரம், அடுத்தது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தால் இயங்குவது, செயல் திறன் மிக்க மக்கள், பொருட்களுக்கான தேவை ஆகிய இந்த ஐந்தும் மிக முக்கியமானது. இதற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.

நான் இன்று ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவிக்கிறேன். நாட்டுக்கான இந்த சிறப்பு பொருளாதார நிவாரண தொகுப்பு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10% ஆகும். கோவிட் -19 தொடர்பாக இதுவரை அரசு வெளியிட்ட அறிவிப்புகள், ரிசர்வ் வங்கியின் நிதி சார்ந்த அறிவிப்புகள் மற்றும் இன்றைய நிதி தொகுப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் கோடி வரை இருக்கும்.

இந்த நிதியை பயன்படுத்தி கொண்டு வலிமையான இந்தியாவை உருவாக்க முயற்சி முன்னெடுக்கப்படும். சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்ளிட்ட பல துறையினருக்கும் இந்த நிதி ஊக்கமளிக்கும். உள்ளூர் சந்தைகளை வலுப்படுத்துவது, உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலியை பலப்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு இது பயன்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்க வேண்டிய காலகட்டம் இது. தற்சார்பு பொருளாதாரம் நமது பலம். தற்சார்பு என்பது சுயநலம் கிடையாது. இந்தியா முன்னேற்றம் மற்றும் தற்சார்பு அடைந்தால் உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் அது பலனை அளிக்கும். இந்த வைரஸின் தாக்கம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே ஒரு பக்கம் நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு, மற்றொரு பக்கம் பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தியா நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்த போகிறது.

அது குறித்த அறிவிப்பு மே 18ஆம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். இதுவரை இருந்த ஊரடங்கை காட்டிலும் இது மாறுபட்டதாக இருக்கும். அது தொடர்பான அனைத்து விவரங்களும் மே 18ம் தேதிக்கு முன்பாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *