சென்னை திருமழிசையில் சந்தை தொடங்கியதால் காய்கறி விலை குறைந்தது..! தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை..

திருமழிசையில் சந்தை தொடங்கியதையடுத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

சென்னை, மே-12

சென்னை கோயம்பேடு சந்தையில் சில வியாபாரிகள், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதாக தமிழக அரசு கடந்த 4-ம் தேதி அறிவித்தது.

இருப்பினும், பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே, கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் சென்னையில் காய்கறி விலை கணிசமாக உயர்ந்து வந்தது. பெரிய வெங்காயம் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.130 வரையும், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் ரூ.80, கோஸ் ரூ.50, பீன்ஸ் ரூ.180 வரையும், வெண்டைக்காய் ரூ.80, பூண்டு ரூ.240, கேரட் ரூ.160, இஞ்சி ரூ.120, முருங்கைக்காய் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி தொடங்கியதையடுத்து நேற்று முதல் காய்கறி விலை குறைய தொடங்கியது. பீன்ஸை தவிர மற்ற காய்கறிகள் விலை இன்று குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 350 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் வந்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று தக்காளி கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ரூ.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைபோல், பெரிய வெங்காயம் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.25, கத்திரிக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.60, வெண்டைக்காய் ரூ.25, கேரட் ரூ.20, இஞ்சி ரூ.50-க்கும், முள்ளங்கி -ரூ 20-க்கும், அவரைக்காய் – ரூ 30, பீட்ரூட் – ரூ 20, புடலங்காய் – ரூ 20, பச்சை மிளகாய் -ரூ 20 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *