தமிழகத்தில் மே 31 வரை ரயில், விமான சேவையை அனுமதிக்க வேண்டாம்.. பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் பயணிகள் ரெயில் மற்றும் விமான சேவைகளை மே 31-ம் தேதி வரை தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, மே-11

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு, கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்தி ரெயில், விமான சேவைகளை மீண்டும் இயக்கலாமா? என பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்மந்திரிகளின் கருத்துக்களை கேட்டார்.

அப்போது காணொலியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மே 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் மற்றும் விமானச்சேவைகளை தமிழகத்தில் தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடியை விடுவிக்குமாறு ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை மறுபடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.312 கோடி மட்டுமே வழங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:

100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாகவே வழங்கிட வேண்டும்.
பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த, முந்தைய காணொலிக் காட்சி வாயிலான உரையாடலின்போது ஏற்கெனவே வலியுறுத்திய ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்வதற்காகவும், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பவதற்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும். இந்த மொத்த செலவையும் தற்போது மாநில அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கிட வேண்டும்
விமான சேவைகளை மே 31 வரை தொடங்க வேண்டாம்.
சென்னையில் அதிகளவில் கரோனா தொற்று பாதித்தவர்கள் இருப்பதால், தமிழகத்தில் மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *