ஐ.என்.எக்ஸ். முறைகேடு: ப.சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு

புதுடெல்லி, அக்டோபர்-03

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணைக்குப் பிறகு, செப்டம்பர் 5ஆம் தேதி நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை மறுத்துவிட்ட நிலையில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடக்கூடும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் வியாழனுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவலை மேலும் 2 வாரங்களுக்கு, அதாவது அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதேசமயம், உடல்நிலையை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், நாள்தோறும் இரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகளுக்கு ஆட்சேபணை இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு ஒரு வேளை மட்டும் வீட்டில் இருந்து உணவு வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *