தமிழகத்தில் உச்சத்தை தொட்ட பாதிப்பு..ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்வு..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரேநாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மே-11

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 500-யை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் இன்று 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 514, பெண்கள் 284. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 92 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் மொத்தம் 11,584 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,43,952 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் தமிழகத்தில் 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய எண்ணிக்கைதான் இதுவரை உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *