தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-11

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணி புரியும் வெளி மாநில தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை 9 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள வெளி மாநில தொழிலாளர்களும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அதுவரை வெளி மாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *