கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத்திட்டாங்க.. சிறுமியின் பதறவைக்கும் வாக்குமூலம்..

விழுப்புரம் அருகே 10ம் வகுப்பு மாணவியை வீட்டில் கட்டிப்போட்டு உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவத்தில் அவர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது வாக்குமூலம் தற்போது பதறவைத்துள்ளது. “நான் தனியா வீட்டில் இருந்தேன்.. அவங்க 2 பேரும் வந்து என் வாயில துணி வெச்சு அடைச்சாங்க.. கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத்திட்டாங்க” என்று சிறுமி வாக்குமூலம் தந்துள்ளார்.

விழுப்புரம், மே-11

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெயஸ்ரீ (15) வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுமியை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.

அப்போது, ‘வீட்டில் தனியாக இருந்த தன்னை, முருகன், கலியபெருமாள் 2 பேரும் சேர்ந்து எனது கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக கூறினார். சிறுமி ஜெயஸ்ரீ சொன்ன வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த பெற்றோர் கதறித் துடித்தனர். சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ‘எங்களுக்குள் ஏற்கெனவே முன்பகை இருந்து வந்தது. அவர்கள் என் மகனை தாக்கினர். அதனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு அதுகுறித்து புகார் கொடுக்க காவல்நிலையத்துக்கு சென்றேன். அந்த ஆத்திரத்தில்தான் அவர்கள் யாரும் இல்லாத சமயத்தில் இப்படி தீ வைத்து என் மகளை எரித்து விட்டனர். அவர்களை சும்மா விடக்கூடாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி கதறியபடியே அழுதுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டதால் அந்த சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *