புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்…அனைத்து மாநிலங்களுக்கு மத்திய உள்துறை கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையிலும் ரெயில் பாதைகளிலும் நடந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

டெல்லி, மே-11

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து, வருமானம் இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் உரிய போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் உள்ளது. சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டாலும், அந்த ரெயிலைப் பிடிப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே, புலம்பெயர் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் திரும்புவதை அனுமதிக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் அனுப்பி உள்ளார். அதில், சாலைகள் மற்றும் ரெயில் தடங்களில் நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை கவலை அளிக்கிறது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக பேருந்துகள் மற்றும் ஷ்ராமிக் சிறப்பு ரெயில்களின் இயக்கம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாநில அரசுகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையிலும் ரெயில் பாதைகளிலும் நடந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நடந்து சென்றால் செல்பவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும். பேருந்து அல்லது சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *