லலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு

அக்டோபர்-03

திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த விசாரணையில் வடமாநிலத்தவர்கள் 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் சிசிடிவியின் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் பெரிய துளையிட்டு, நகைக்கடையின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

போலீஸாரின் விசாரணையில் கொள்ளையர்கள் 2 மணி நேரம் கடைக்குள் இருந்ததும், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் முகமூடியை முகத்தில் மாட்டிக்கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் நகைக் கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அம்பலமானது.

அதைத்தொடர்ந்து திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தனியார் விடுதிகளிலும் போலீஸார் விசாரிக்க தொடங்கினார்கள். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஜார்க்கண்டை சேர்ந்த இளைஞர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஒருவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க சுவர் ஏறிக் குதித்து ஓட முயன்றார். அதில் அவரது கால் உடைந்தது. தொடர்ந்து அவனுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து காலி பைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பிடிபட்ட கும்பலிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

இதனிடையே திரைப்பட பாணியில் கொள்ளையர்கள் நகர்ந்து நகர்ந்து கொள்ளையடிக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *