தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 669 பேருக்கு பாதிப்பு..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, மே-10

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 412 பேர் ஆண்கள், 257 பேர் பெண்கள். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,959 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,195 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 12,962 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள் 2,32,368. தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 509 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.