இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109-ஆக உயர்வு
இந்தியா முழுவதும் 62 ஆயிரத்து 939 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி, மே-10

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வைரசின் தாக்கமும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொடர்பான தகவல்களை மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3276 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 128 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 2,109 பேர் உயிரிழந்த நிலையில், 19,358 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3800 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 7796 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 449 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1872 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம் முதல் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 6535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1605 பேர் குணமடைந்துள்ளனர்.