இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜுலை மாதம் உச்சத்தை எட்டும்…WHO எச்சரிக்கை

இந்தியாவை பொறுத்தவரை ஜூலை மாதம் இறுதியில் கொரோனா தாக்கம் உச்சத்தை எட்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார்.

டெல்லி, மே-9

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்தியாவில் மக்கள் தொகையை ஒப்பிடும்போது, இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது.இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாக செயல்பட்டதால் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிறது. நோய் பரவல் இருமடங்கு ஆவது 11 நாட்களாக இருக்கிறது.

பொது முடக்கம் காரணமாக நோயை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கி விட்டார்கள். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் சில நகரங்களில்தான் நோய் அதிகமாக இருக்கிறது. பொது முடக்கத்தை நீக்கும்போது, நோய் பரவல் தன்மை வெடிப்பாக மாறும். ஆனால், அதை கட்டுப்படுத்தி விடலாம். இந்தியாவை பொறுத்தவரை ஜூலை மாதம் இறுதியில் இதன் தாக்கம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

வயதானவர்களை கொண்ட நாடுகளில் அதிக உயிர் இழப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் பல வயது வரையறையிலேயே மக்கள் இருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் நோய் பரவுதல் வேகமாக இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் நோய் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியிருப்பது சரியானதல்ல. நாங்கள் எங்களது வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து அந்த வேலையை செய்வோம்.

இந்த தொற்று நோயால் மக்கள் விரக்தி அடைந்து இருக்கிறார்கள். நோயை கட்டுப்படுத்த நாங்கள் உழைக்க விரும்புகிறோம். நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்காக நாங்கள் எங்கள் பணியை ஒரு போதும் கைவிட மாட்டோம்.

இவ்வாறு டேவிட் நபாரோ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *