கொரோனா பாதிக்கப்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து புதிய வழிமுறை வெளியீடு.. மத்திய சுகாதார அமைச்சகம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

டெல்லி, மே-9

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வீட்டிற்கு அனுப்புவது குறித்து புதிய வழிமுறை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கொள்கையின் அடிப்படையில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளியை 14 நாள்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பும் முன்பு கொரோனா பரிசோதனை நடத்தி, அதில் தொற்று இல்லை என்று முடிவு வந்து 24 மணி நேரத்தில் மீண்டும் ஒரு சோதனை செய்து அதிலும் தொற்று இல்லை என்று முடிவு வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.

ஆனால், தற்போது திருத்தப்பட்டிருக்கும் கொள்கையில், கொரோனா நோயாளிகளை, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலன் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அதற்கேற்ப அடிப்படை விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன.

கடுமையான உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்களும், கொரோனா கடுமையாக பாதித்த நோயாளிகளுக்கு மட்டுமே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் முன்பு கொரோனா சோதனை நடத்தி அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

கொரோனா தொற்று லேசான பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடல்வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு போன்றவற்றை அடிப்படையாக வைத்து வீட்டுக்கு அனுப்பலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே குணமடைந்தவர்கள், உடல் வெப்பநிலை அதிகமாக இல்லாமல், 95% ஆக்ஸிஜன் நுகர்வு இருப்பவர்களை, 10 நாட்களிலேயே வீட்டுக்கு அனுப்பலாம் என்றும், அவர்களுக்கு மீண்டும் கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்படுவோர், வீட்டில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *