அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.. வைகோ வலியுறுத்தல்
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கள்கிழமை முதல் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, மே-9

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-
தமிழ்நாட்டில் பெருந்தொழில் நிறுவனங்களான ஹூண்டாய், அசோக் லேலண்ட்,ரெனால்ட் நிஸ்ஸான் மற்றும் அவர்களுடைய முதல்நிலை உதிரி பாகங்கள் ஆக்கும் தொழிற்கூடங்கள், பகுதி அளவில் இயங்குவதற்கு தமிழக அரசு இசைவு அளித்து இருக்கின்றது. அவர்களும் பணிகளைத் தொடங்கி விட்டார்கள்.
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிய, சிறு குறு நடுத்தரத் தொழில நிறுவனங்களும் பணிகளைத் தொடங்கி விட்டனர். ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க முடியவில்லை. இவர்கள்தான், மேற்கண்ட பெருந்தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை ஆக்கித் தருகின்றார்கள். அவர்கள் இயங்க முடியவில்லை என்றால், பெருந்தொழில் நிறுவனங்கள் அவர்களுக்குக் கொடுத்து இருக்கின்ற உதிரி பாகங்கள் கொள்முதல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றார்கள். மற்றவர்களும், மாற்றி விடக்கூடும்.
அதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். ஏற்கனவே கடந்த 45 நாள்களாக தொழில் முடக்கத்தால், பெரும் இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே இருந்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். குடியிருப்புகளும் கிடையாது. வடமாநிலத் தொழிலாளர்கள் தொழிற்கூடங்களிலேயே இருக்கின்றார்கள்.
அங்கே தொழில்களை இயக்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. கொரோனா பரவலைத் தடுக்க, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கள்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கள்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.