1 லட்சம் பி.சிஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.. கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தும் சுகாதாரத்துறை..

கொரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகள் வந்தடைந்துள்ளன.

சென்னை, மே-9

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 399 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை பி.சி.ஆர் சோதனை கருவிகள் மூலம் விரைவாக மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பி.சி.ஆர் சோதனை கருவிகள் கையிருப்பில் இருப்பதன் மூலம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே பரிசோதனைகளை விரிவுபடுத்தும் வகையில் மேற்கொண்டு 1 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் இன்று தமிழ்நாட்டிற்கு வந்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவை அனைத்தும் மாவட்ட வாரியாக பாதிப்புகளின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கு விரைவில் பிரித்து அனுப்பப்படும் எனவும் அதன்பின் 2 லட்சத்து 20 ஆயிரம் கருவிகள் மூலம் தொடர் சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதேசமயம், மேலும் 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க தென்கொரியாவிடம் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *