இந்தியாவை அச்சுறுத்தும் பட்டினிப்போர்..ஜான் ஆரோக்கியசாமி..

இது தொடர்பாக ஜே பி ஜி – பேக் நிறுவனர்களில் ஒருவரும், அரசியல் வியூக அமைப்பாளருமான ஜான் ஆரோக்கியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , கையளவு செல்போனில் உலகை  ரசித்தவர்களை,கண்ணுக்கு தெரியாத வைரஸ் இன்று முடக்கியது மட்டுமின்றி உயிர் பயத்தை மூளைக்குள் திணித்துவிட்டது.கடந்த 5 மாதங்களாக கண்டம் விட்டு கண்டம் பரவிய இந்த கிருமி இப்போது ஊர் ஊராக பரவும் நிலையை அடைந்திருக்கிறது.பெருந்தொற்று நோய் என்று எச்சரிக்கப்பட்டுள்ள இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்தவும்,மருந்து கண்டுபிடிக்கவும் மும்முரமாக ஈடுபட்டுள்ள நாடுகள்,உடனடியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்றால் அது லாக்டவுன் எனப்படும் ஊரடங்கு தான்.இதனை ஒவ்வொரு நாடும் அவர்களது ஆற்றலுக்கேற்ப நடைமுறைப்படுத்தியது.அந்த நாடுகள் அனைத்தும் தற்போது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது பட்டினிப்போர் தான்.

தடுமாறும் நாடுகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த நாடுகள் ஒரு புறம் நோயால் மக்கள் மடிந்துவிழுவதையும்,மறுபுறம் மக்கள் அன்றாட தேவைக்காக அவதிப்படுவதையும் சந்தித்து வருகிறது. உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தாத நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் (WTO) அமைப்பின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யமுடியவில்லை. அனைத்து நாடுகளிலும் சரக்கு போக்குவரத்துக்கு அவ்வளவு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


கோவிட் 19 என்ற இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஊரடங்கு,தனிமைப்படுத்துதல்,நோய்எதிர்ப்பு சக்தி மிக்க உணவு அவசியம் என்று பரிந்துரைத்துள்ள உலக சுகாதார அமைப்பு (WHO),நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்,இந்த நிமிடம் வரை அதற்கான தடுப்பு மருந்து என்று குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே இந்த அமைப்பு அறிவுறுத்தி கண்காணித்து வருகிறது. கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ள உலக சுகாதார அமைப்பு, உணவு தானிய உற்பத்தியிலும் சம்பந்தப்பட்ட நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறவில்லை.காரணம் அந்த அமைப்பு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது.

சீனாவின் அரக்கத்தனம்கோவிட் வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும்,அந்த வைரஸ் வூகான் என்ற மாகாணத்தை மட்டுமே மரணக்குழியாக மாற்றியது.மற்ற மாகாணங்களை பெரிதாக தாக்கவில்லை.சீனாவின் தலைநகரான பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் எந்தவித பாதிப்புகளையும் சந்திக்கவில்லை.அவர்கள் கட்டுப்படுத்திய விதம் இரக்கமற்ற அரக்கத்தனம் என்றுதான் சொல்கிறார்கள்.இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, கொரோனா வைரஸை எதிர்கொண்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினாலும், வூகானில் 76 நாட்கள் ஊரடங்கை கட்டாயப்படுத்தினார்கள்.முக்கிய பகுதிகளில் வீடுகளுக்கு அவர்களே பூட்டுப்போட்டதாக செய்திகள் வந்தன. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவாமல் இருந்த தால், பாதிக்கப்பட்ட பகுதிகளை கவனமாக கையாண்டார்கள். 


இந்தியாவில் கோவிட் தாக்கம்


கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி சீனாவுடன் இந்தியாவை ஒப்பிடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஜனவரி மாதம் இந்தியாவுக்குள் புகுந்த இந்த வைரஸ் ஒரு குறிப்பிட்ட பகுதியோடு அடங்காமல்,கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.நகர்ப்புறவாசிகள் மட்டுமின்றி கிராமப்புறத்தை சேர்ந்தவர்களையும் இது விட்டுவைக்கவில்லை.நாளுக்குநாள் இதன் வேகம் அதிகரித்துவருவது உண்மையில் கவலை அளிக்கிறது. அப்படி செய்திருக்கலாம்,இப்படி செய்திருக்கலாம் என்று வெட்டித்தனமாக பேசுவதை விட ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இப்போது அவசியமானது. ஏறத்தாழ 137 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில்,கொரோனா வைரஸிள் தாக்கம்  மிக குறைந்த சதவீதம் தான், ஆனால்,அது ஏற்படுத்திய பாதிப்பு ஒவ்வொருவரின் பல்சை மட்டுமல்ல பர்சையும் பதறவைத்திருக்கிறது.அதற்கு காரணம் வளர்ந்த நாடுகளே திண்டாடும்போது,137 கோடி பேருடன் இருக்கும் இந்தியா எந்த கதி ஆகப்போகிறது என்பது தான்.


மாநிலங்கள் சந்திக்கும் பிரச்சனைகள்


இந்தியா இந்த வைரஸை எதிர்கொள்ளும் பாதை என்று பார்த்தால்,ஊரடங்கு என்ற ஒரே நடைமுறையும் உரிய வழிகாட்டுதல்களுடன் சிகிச்சை முறை. இது அவசியமானது மறுக்கமுடியாதது.டெல்லி,சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடுவீடாக சென்று மக்களிடம் ஆய்வு,நலிந்தோருக்கு உதவிகள்,நோயாளிகளுக்கு சத்தான உணவு,தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள் கருணையுடன் கண்காணிப்பு,மக்கள் சேவையாற்றுபவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,ஊக்கத்தொகை,காப்பீட்டுத்தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.ஊரடங்கு காலகட்டத்தில் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை முடங்கப்பட்டதால் எந்த அரசுக்கும் வரிவசூல் கிடையாது.ஏற்கனவே நிதி நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதுமான அளவுக்கு நிதியளிக்க முடியவில்லை.இதனால் அடுத்தடுத்த  கட்டங்களை எவ்வாறு சந்திப்பது என்ற ஆலோசனையில் அவை மூழ்கியுள்ளன.கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதால் மகாராஷ்டிரா,ராஜஸ்தான்,டெல்லி,தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்,இதற்கு தேவையான மருத்துவக்   கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு நிதி திரட்டி வருகின்றன. இதனை அந்தந்த அரசுகள் எவ்வளவு காலத்துக்குள் முடிக்கும் என்று கணக்கிட முடியாத நிலையே இருக்கிறது.


6 மாதங்களுக்கு தானியங்கள் கையிருப்பு


நாடுமுழுவதும் ஊரடங்கு என்ற நடைமுறையை சந்திக்கும் மக்கள் ஆரம்பத்தில் வரவேற்றாலும்,அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்போது கோபமடைந்திருக்கிறார்கள்.நோய் பரவுவதால் வெளியே வரவில்லை ஆனால்,எங்கள் பசிக்கு என்ன செய்ய என்ற குரல் தான் இப்போது அதிகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.இது பற்றிய ஆய்வை பார்த்தால் பீதி ஏற்படும் நிலையில் இருக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் நாடுமுழுவதும் உள்ள 5 லட்சம் நியாயவிலைக்கடைகள் வழியாக மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளில் 77 மில்லியன் உணவு தானியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி காலகட்டத்தில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.இதனை மாநில அரசுகள் கூடுதல் நிதிச்சுமையுடன் செயல்படுத்தி வருகின்றன. ஆறு மாதங்களுக்கு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தானியங்கள் கையிருப்பு உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு பிறகு மத்திய அரசு எவ்வாறு கொள்முதல் செய்யும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.


உணவுக்காக கலவரம் வெடிக்கும் ஆபத்து


எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பீகாரில் இப்போதே உணவுக்கான குரல் உயரத் தொடங்கியிருக்கிறது.இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல மாநிலங்களில் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வந்தவர்கள்,இவர்கள் தற்போது சொந்த ஊர்களில் முடங்கி கிடக்கிறார்கள்.தினக்கூலி,வாரக்கூலி,மாதக்கூலி என்ற அடிப்படையில் இருந்தவர்களுக்கு இப்போதுள்ள நிலையை எதிர்கொள்ள முடியவில்லை.இது குறித்து கருத்து தெரிவித்த பீகார் மாநில தலைமை செயலாளர் தீபக்குமார்,உணவுக்காக கலவரம் வந்துவிடுமோ என்று அஞ்சுவதாக தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தின் நிலையை அவர் உணர்ந்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது. இந்தியாவின் உணவு உற்பத்தி 2019 -2020 காலகட்டத்தில் 291.95 மில்லியன் டன்னாக இருந்தது.இது முந்தைய நிதியாண்டை விட 6.74 மில்லியன் டன் அதிகம்.இதனால் உற்சாக மிகுதியில் இருக்கும் இந்திய உணவு கழகம் அடுத்த எவ்வாறு கொள்முதல் செய்யப்போகிறது என்பது தான் பெரிய கேள்வி. 


என்ன செய்ய வேண்டும்


கேரளா,கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இப்போதே அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.இன்னும் சில வாரங்களில் மேலும் சில மாநிலங்கள் இந்த பட்டியலில் சேரலாம். ஊரடங்கு நடைமுறைக்கு எல்லை இன்னும் நிர்ணயிக்கமுடியவில்லை. நோயின் தாக்கத்தை முழுமையாக அகற்ற எத்தனை மாதங்கள் ஆகும் என்பதையும் யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த வைரஸ் தாக்கத்தால் சுமார் 35 கோடிக்கும் அதிகமானோர் வறுமை கோட்டுக்கு கீழே சென்று விடும் ஆபத்து இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தற்போது வேலைஇழந்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும்.மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் இந்த காலகட்டத்தில் மத்திய மாநில அரசுகள் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.


இந்தியாவின்  முன்னணி தொழிலதிபர்களான அம்பானி,அதானி,பஜாஜ், அனில் அகர்வால் உள்ளிட்டோரின் தொழில் கடல் கடந்தவை என்பதால்,அவர்கள் சர்வதேச சந்தையின் தங்களின் நிறுவனத்தை  வலுவாக்க தங்களது நிறுவனங்களை திறக்க லாபி செய்து வருகின்றனர்.வாகனங்கள்,சிமெண்ட்,கம்பி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் ,அதனை தயார் செய்து யாரிடம் விற்பார்கள்.வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நுகர்வோர் எந்த வாகனத்தை வாங்க முடியும் என்பதை யோசிக்க வேண்டும்.நுகர்வோருக்கான வாங்கும் திறன் இல்லாத நிலையில் அந்த நிறுவனத்தை திறக்க ஏன் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,தொழிலை முடக்கவேண்டும் என்று வலியுறுத்தவில்லை.எதற்கு முக்கியத்துவம்,எதற்கு முன்னுரிமை என்பது தான் இப்போது அவசியமானது.மின்சாரம், இயந்திரங்கள், அவை தொடர்பான கருவிகள் என அனைத்து வசதிகளும் இருந்த சாதாரணக் காலத்திலேயே தொழிற்சாலைகளுக்கு சில சிக்கல்கள் இருந்தன.


இப்போது, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், ஒட்டுமொத்த ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர்களை மட்டுமே வேலைக்கு அழைத்திட வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகள் அரசுகளால் போடப்பட்டுள்ள இந்தச் சூழலில் எப்படி தொழிற்துறையை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்? அப்படியே வெற்றிகரமாக அழைத்துச் சென்றாலும், நுகர்வோர் வாங்கினால்தானே உருவாக்கப்படும் பொருட்களுக்குப் பயன் இருக்கும்? இதன் காரணமாக தொழிற்துறையையே முடக்கச் சொல்லவில்லை. எந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முதலில் அரசுகள் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே இந்நேரத்தில், வேளாண்துறைக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்றால், அது சமூக சீர்கேட்டிற்கே வழிவகுக்கும்!.

தீர்வு என்று சொல்வதை விட, அதற்கான அனுகுமுறையை சொல்கிறேன். முதலில் ஒட்டுமொத்த மாநில அரசுகளும் விவசாயத்தை நேரடியாக தங்கள் கைகளில் எடுத்திட வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, மாநிலம் முழுவதிலும் உள்ள அத்தனை விவசாயப் பிரதிநிதிகளையும் தமிழக அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழகத்தில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன விளைச்சல் மேற்கொள்ளப்படுகிறது என்பதை வேளாண் பல்கலைக்கழகத்தைக் கொண்டு ஆய்வு செய்திட வேண்டும்.


ஏனெனில், டெல்டாவில் அரிசி விளையும், அதுபோல் தென்பகுதிகளிலும், வடபகுதிகளிலும், மேற்குப் பகுதிகளிலும் வேறு வேறு விளைச்சல்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் ஆராய்ந்து, அதனை மேம்படுத்துவதற்காக திட்டம் ஒன்றைத் தயாரித்திட வேண்டும். விவசாயம் என்பது வேளாண்துறைக்கு கீழ் வந்தபோதிலும், இதில் பல துறைகளின் கூட்டு முயற்சி இருத்தல் அவசியம். அதற்காக, ‘Multi Ministry Co-0rdination Task Force’ எனப்படும் ‘பல்துறை ஒருங்கிணைப்புக்குழு’ ஒன்றை அமைத்திட வேண்டும்.


வேளாண்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை என 6 துறைகள் ஒன்றிணைவது அவசியம். ஒருங்கிணைப்புக்குழு மூலம் விவசாய விளைச்சல் செய்வதில் இருந்து, அறுவடை செய்து, கொள்முதல் செய்து, சந்தையில் விற்பனை செய்து, நுகர்வோருக்குக் கிடைக்கும் வரை எல்லாவற்றையும் அரசே முன்னின்று மேற்கொள்ள வேண்டும். ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு என்னதான் ரிலாக்ஸேஷன் கொடுத்தாலும், அரசே நேரடி கட்டுப்பாட்டில் விவசாயத்தைக் கொண்டு வந்தால்தான் விவசாயிகளும், நுகர்வோரும் காப்பாற்றப்படுவார்கள். இதனை விடுத்து, தொழில்துறையில் மட்டுமே கவனம் செலுத்தினால் உள்நாட்டு போர்  ஏற்படுவதை தடுக்க முடியாது!                     

கேடயமாக செயல்படுதல்   

கொரோனா தொற்று முடியாத வரை அரசால் எப்படி விவசாயத்தில் கவனம் செலுத்த முடியும்? என நீங்கள் கேட்கலாம். கோவிட் தொற்று, முதலில் 21 நாளில் முடியும் என்றனர், பின்னர் 19 நாட்கள் ஊரடங்கை நீட்டித்திருக்கிறார்கள். அடுத்து 3 மாதமாகும் என்கிறார்கள். கொரோனா என்கிற கண்ணுக்குத் தெரியாத எதிரியை வாள் கொண்டு போராட முடியாது. அதற்காகத்தான் நாங்கள் பல மாநில அரசுகளுக்கு ’ஷீல்ட்’ என்ற வியூகத்தைக் கொடுத்திருக்கிறோம். ஷீல்ட் என்கிற கேடயத்தைக் கொண்டு கொரோனாவை முடிந்தவரை தள்ளிக்கொண்டேதான் செல்ல வேண்டும். எதுவரை என்றால், அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் வரை!


அதுவரை இப்போது போல ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டுகொண்டேதான் இருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பதும் சுகாதாரத்தில் வருவதுதானே! அதனால், ஒருபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்திக் கொண்டே, மறுபக்கம் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். கொரோனாவைத் தடுக்க ‘இம்மியூனிட்டி’ என்கிற நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு மனிதர்களுக்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா? உணவுக்கே பஞ்சம் ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி கிடைக்கும்? அதனால், மத்திய, மாநில அரசுகள் கேடயத்தைக் கொண்டு ஒருகையில் கொரோனாவை தடுத்துக்கொண்டே, இன்னொரு கையால் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டியது காலத்தின் கட்டாயம்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *