கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கடந்த 24 மணி நேரத்தில் 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோர் விகிதம் 29.36% உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மே-8

டெல்லியில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆகவும், உயிரிழப்பு 1,886 ஆகவும் உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,273 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 29.36% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 16,540 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் தேவைப்படும் 215 இடங்களில் வைக்கப்படும். நாட்டில் 216 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 42 மாவட்டங்களில் கடந்த 28 நாள்களில் கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.

நாம் ஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது ஆகிய இரண்டு பணிகளை பற்றி பேசி வருகிறோம். இரண்டும் மிகவும் சவாலானது. அதனால் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது வழிகாட்டுமுறைகள் மிகமிக முக்கியம். வைரஸிலிருந்து தன்னைத்தானே ஒருவர் காப்பாற்றிக்கொள்ள, சமூக பழக்க வழக்க மாற்றத்தை பின்பற்ற வேண்டும். இது மிகப்பெரிய சவால். இதற்கு மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *