நடிகர் சங்க தேர்தல்: 15-ம் தேதி முடிவெடுக்கப்படும்-ஐகோர்ட்

சென்னை, அக்டோபர்-03

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15-ம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

2019-2022 ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் இருந்தது.

வாக்கு எண்ணிக்கை குறித்து நடிகர் சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி கல்யாணசுந்தரம் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் தரப்பினர் கால அவகாசம் கோரியதால், அவர்களுக்கு அவகாசம் வழங்கும் வகையில் வழக்கை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி கல்யாண சுந்தரம், 15-ம் தேதியன்று வாதங்களை முன் வைத்தாலும், இல்லாவிட்டாலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *