மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு..தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கூடாது – ஸ்டாலின், விஜயகாந்த்

தமிழகத்தில் மதுபான கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை, மே-8

கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால், மதுபான கடைகளில் சமூக விலகல் அல்லது தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. இதனை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு தரப்பினர் முறையிட்டனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

அதிமுகவின் கூட்டணிக் கட்சியான தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும்.

இதேபோல், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அரசு கைவிட வேண்டும். கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மக்களின் நலன் காக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அ.தி.மு.க. அரசு கைவிட்டு, மக்களின் உயிரைப் பணயம் வைக்காமல், ஊரடங்கினை நீர்த்துப் போகச் செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *