தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, மே-8

தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்பான கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 3000க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடை திறப்பிற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்வதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றமும் டாஸ்மாக் கடை திறப்பிற்கு தடை விதிக்காமல் அனுமதியளித்தது.

டாஸ்மாக்கில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வயது வாரியாக மது பானங்களை வாங்க நேரம் ஒதுக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருந்து மதுபானங்களை வாங்கினர். மது வாங்கும் ஆர்வத்தில் பல இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளில், உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்த புகைப்பட ஆதாரங்களுடன், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *