நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு அனுமதி… இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவிப்பு..!

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி, மே-8

இந்தியா முழுவதும் 56 ஆயிரத்து 342 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவியவர்களில் 37 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 540 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி தரவேண்டும் என தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.

கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் செலுத்துவது தான் இந்த சிகிச்சையாகும். இதன்மூலம் கொரோனாவில் இரு்து மீண்டவர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர உதவும். சில மாநிலங்களில் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இந்த சிகிச்சைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரியிருந்தது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை, வேலூரில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று கொரோனா குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறையின் இணைச்செயளாலர் லவ் அகர்வால், கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு பரிசோதனை முயற்சியில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சோதனை முயற்சிக்கு நாடு முழுவதும் முதலில் 21 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *