மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் மோதி 17 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிரம் மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மும்பை, மே-8

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை, அஞ்சல் மற்றும் ரயில் சேவைகள், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் பல மாநிலங்களில், நகரங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனிடையே சில நகரங்களில் சிக்கி தவித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கான பயணத்தைத் தொடங்கினர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் இருந்து வரும் மகாராஷ்டிரத்தில் தவித்து வந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

வெகுநேரம் நடந்ததில் சோர்வடைந்த தொழிலாளர்கள் அனைவரும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் எந்த ரயிலும் வராது என்று நினைத்து அவுரங்காபாத் அருகே கர்மாட்டில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கி உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் வந்துள்ளது. ரயில் சத்தம்கேட்டு அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *