மத்திய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்தத்தால் இலவச மின்சார திட்டங்களுக்கு ஆபத்து.. ஸ்டாலின் எச்சரிக்கை

புதிய மின்சார திருத்தச் சட்டம் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை – நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சென்னை, மே-8

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மின்சாரம் தொடர்பான மாநில அதிகாரங்களை அபகரிக்க புதிய மின்சார திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள். மின் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு இனி, ஆணையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும்.

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய தேர்வுக் குழுவே தேர்வு செய்யும். உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் ஒரு மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநில ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடலாம். புதிய மின்சார சட்டத்திருத்தம் கலைஞர் கொண்டு வந்த விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும். 

உதய் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்கட்டண உயர்வு, மின்வாரியத்திற்கு மீண்டும் இழப்பு, இலவச மின்சாரத்திற்கு ஆபத்து என்று பல்வேறு நெருக்கடிகளை தமிழகம் அனுபவித்து வருகிறது. அதிமுக அரசு காயம் ஏற்படாமல் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எப்போதும் செய்வதைப்போல் இப்போதும், ஆமாம் சாமி போட்டு நழுவிவிடாமல் இந்த கருப்புச் சட்டத்தை கடுமையாக எதிர்த்திட வேண்டும். மாநிலங்களின் அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்வதன் தொடர்ச்சியான இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *