வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் சந்திரசேகர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த தென்காசி வீரர் சந்திரசேகரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி, மே-8

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கும் மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். 31 வயதான இவர் சிஆர்பிஎப்-ன் 92வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.
பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சந்திரசேகர் பங்கேற்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக படுகாயமடைந்த அவர் வீர மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து சந்திரசேகரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை 7 மணி அளவில் சந்திரசேகரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவர்களது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பிறகு இரவு 8.30 மணி அளவில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக சந்திரசேகரின் உடலுக்கு அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறை அதிகாரிகள் சந்திரசேகரின் குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். இதனிடையே சந்திரசேகரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய் நிதி, சந்திரசேகரின் மனைவியிடம் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *